அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினரை குறிவைத்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஒரு காணொளி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் மகனைக் கொல்லத் திட்டம் தீட்டி, அதற்காக தேடும் நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 வயது மகனான பேரன் டிரம்பை கொலை செய்யும் வழிகளை விவரிக்கும் இரண்டு நிமிட காணொளியை ஈரானின் அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளியில், பேரன் டிரம்பின் அன்றாட நடமாட்டங்கள் மற்றும் அவர் செல்லும் இடங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அவர் தனது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வந்து, எக்ஸ்பாக்ஸ் வலைதளம் வழியாகக் குரல் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எக்ஸ்பாக்ஸ், ஃபிஃபா வீடியோ கேம்கள் மற்றும் டிஸ்கார்ட்  செயலிகளில் அவர் பயன்படுத்தும் கணக்குகளும் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொடூரச் செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.95 கோடி ($10 மில்லியன்) வெகுமதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில், ‘இது வெறும் ஆரம்பம் தான். பேரன் டிரம்ப், எங்களுக்காக காத்திருங்கள்’ என்ற நேரடி மிரட்டலுடன் அது நிறைவடைந்துள்ளது.

கடந்த மாதமும் இதே போன்றதொரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் குடும்பத்தைக் குறிவைத்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட மற்றொரு காணொளியில், மெலானியாவை கொலை செய்வது குறித்துப் பேசப்பட்டிருந்தது.

‘மெலானியாவை எங்கே கொல்வது’ என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், அவர் நியூயார்க் நகரில் செல்லும் இடங்கள் மற்றும் வழக்கமாகப் பொருட்கள் வாங்கும் ஆடம்பரக் கடைகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன. மேலும், அவர் வாங்கும் ஆடைகளில் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய நச்சுப் பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு விஷம் வைக்கலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது உலக நாடுகளைப் பதற வைத்தது. ஈரானின் இந்தத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது பாதுகாப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

மெலானியா மற்றும் பேரன் டிரம்ப் ஆகிய இருவருக்கும் அமெரிக்க ரகசிய சேவைமூலமாக 24 மணி நேர தீவிரப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  வெள்ளை மாளிகை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர், நியூ ஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ எஸ்டேட் உள்ளிட்ட டிரம்பின் அனைத்துச் சொத்துக்களும் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், ஈரானின் இந்த பகிரங்கக் கொலை மிரட்டல் காணொளி உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.