பாகிஸ்தான் அரசு தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவிடம் சுமார் 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.95,000 கோடி) நிதியுதவி கோரி பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

சீனா, சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிடம் பாகிஸ்தான் ஏற்கனவே வாங்கிய சுமார் 12.3 பில்லியன் டாலர் கடனை அடைக்க முடியாமல் திணறி வருகிறது. பொருளாதாரத்தைச் சமாளிக்கவும், முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் தேவையான வழிமுறைகள் இல்லாததால், பாகிஸ்தான் மீண்டும் பிற நாடுகளின் நிதி உதவியை எதிர்பார்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சமீபத்தில் ஈரான் உடனான போரின்போது இரு நாடுகளுக்கும் இடையே தூது சென்ற நிகழ்வைச் சாதகமாகப் பயன்படுத்தி, அமெரிக்காவிடம் இந்த நிதி உதவியைப் பெற பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் வாயிலாக இந்த நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து மீள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.