தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்தது தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதமும் தனிநபர் சாடல்களும் அரங்கேறின.

அவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், “நாகர்கோவிலில் அடிக்கல் நாட்டப்பட்டு 6 மாதங்களாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. தவெக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டன? தொழில்துறை வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் அடித்தளம். பரந்தூர் திட்டத்தை ரத்து செய்தது முதலீடுகளைப் பாதிக்கும்” என்றார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “விவசாயிகளின் நலனுக்காகவே பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மாற்று இடம் விரைவில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஊழலற்ற கட்டமைப்பு மற்றும் ஒற்றைச்சாளர முறை மூலமே தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்ட நிலையில், அந்த நிலங்களை என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “48 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன. ‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை’க்காக பரந்தூர் பகுதியில் நிலங்களை வாங்கிக்குவித்து கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை அமைக்கப் போகிறீர்கள் என நான் கேட்கட்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியாகப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலங்களைக் கொண்டு மக்களைப் பாதிக்காத வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என விளக்கமளித்தார்.