மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவ்டா மலையில்  நடந்த கோர விபத்தில் குனால் சந்த்குடே மற்றும் அவரது பெற்றோர் முரளீதர், சங்கீதா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது வெறும் ஐபோனுக்காக நடந்த தற்கொலை முயற்சி அல்ல என்று குநாாலின் தாய்வழி உறவினர்கள் புதிய விளக்கத்தை அளித்துள்ளனர்.

மகன் குநாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஐபோன் வாங்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவன் மலையேறி தற்கொலைக்கு முயன்றதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், இந்த வாதத்தைத் தாய்வழி உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

குநாாலின் தாய்மாமன் உறவினரான அவரது அத்தை கூறுகையில், “குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே சில சொத்துத் தகராறுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால், குனால் தனது பெற்றோர் இருவரும் சண்டைகளை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்பினான். அவன் எதற்காகவும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் மலையேறவில்லை; தனது குடும்பத்தை இணைக்க வேண்டும் என்பதே அவனது நோக்கமாய் இருந்திருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குநாாலுக்காக வாங்கப்பட்ட ஐபோன் குறித்துப் பேசிய அவர், “அந்த போன் அவனது படிப்புத் தேவைகளுக்காகவே வாங்கப்பட்டது. அது ஒரு செகண்ட்-ஹேண்ட் போன் தான், அதற்கான விலையை வழங்கும் அளவுக்குக் குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில்தான் இருந்தது. அதை ஒரு பெரிய விஷயமாகப் பேசி வருவதில் உண்மையில்லை” என்றார்.

 

பத்தாம் வகுப்பில் 82% மதிப்பெண்கள் பெற்று, எம்பிபிஎஸ் கனவோடு நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த ஒரு புத்திசாலி மாணவன் குனால் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, சம்பவத்தன்று காலை வகுப்பிற்குச் செல்வதாக வீட்டில் கிளம்பிய குனால் கவ்டா மலை உச்சிக்குச் சென்றுள்ளார். அவர் கீழே இறங்க மறுத்துவிட்டதால், நிலைமையைச் சமாளிக்கக் குடும்பத்தினரும் போலீசாரும் முயன்றனர். அப்போது தந்தையான முரளீதர் மகனை சமாதானப்படுத்தி மீட்க முயன்றபோது கால் தவறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் உடனடியாக மலையிலிருந்து குதித்துள்ளார்.

இதற்கிடையே, முரளீதரின் சகோதரி சோபா ராஜேந்திர மாஸ்கே கூறுகையில், முரளீதருக்கும் சங்கீதாவுக்கும் இடையே நீண்டகாலமாகவே குடும்பப் பிரச்சனைகள் இருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.