திருமணம் செய்து கொள்ளாமல் துணையுடன் சேர்ந்து வாழும் முறையான லிவ்-இன் உறவு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வில், நகர்ப்புறங்களில் உறவில் இருக்கும் திருமணமாகாத பெண்களில் 6.67 சதவீதம் பேர் தங்களது துணையுடன் வசிப்பது தெரியவந்துள்ளது. அதாவது, சுமார் 100 பெண்களில் 7 பேர் லிவ்-இன் உறவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு 20 நகரங்களில் 1,798 திருமணமாகாத பெண்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மாற்றத்தின் பின்னணியில், லிவ்-இன் உறவுகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது எப்படி என்ற விவாதமும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, உறவில் ஏற்படும் பிரச்னைகள், பிரிவு ஏற்பட்டால் கிடைக்க வேண்டிய சட்டப் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், இரு வயது வந்தவர்கள் தங்களது விருப்பப்படி வாழும் தனிப்பட்ட உறவில் அரசின் தலையீடு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் உத்தரகண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் லிவ்-இன் உறவுகளை பதிவு செய்வது உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பல மாநிலங்கள் இந்த உறவுகளுக்கான விதிமுறைகள், பதிவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளைப் பற்றி ஆலோசித்து வருகின்றன. இதனால் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் மத்தியில் புதிய சட்ட விதிகள் குறித்த கவனம் அதிகரித்துள்ளது.

ஆய்வில் இணையப் பயன்பாட்டுக்கும் உறவுகள் மற்றும் திருமணம் குறித்த பெண்களின் அணுகுமுறைக்கும் இடையே தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. தினசரி இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களிடம் தங்களுக்கான துணையைத் தேர்வு செய்வது, காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வது போன்ற நவீன சிந்தனைகள் அதிகமாகக் காணப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இணையப் பயன்பாடே பெண்களை லிவ்-இன் உறவுக்கு அழைத்துச் செல்கிறது என்று இந்த ஆய்வு கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.