இந்தியா மற்றும் ரஷியா இடையேயான நீண்டகால நட்புறவு குறித்து பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொருளாதார தலைவர்கள் மன்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும், மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் இடையே நடைபெற்றதாக கூறப்படும் பழைய உரையாடலை நினைவுகூர்ந்தார். இந்தியா-ரஷியா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதை விளக்கும் வகையில் இந்த சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவதற்கு முன்பு அவருடன் தான் பேசியதாக போரிஸ் ஜான்சன் கூறினார். அப்போது, ரஷியாவுக்கு எதிராக இந்தியாவை உறுதியான நிலைப்பாடு எடுக்க வைப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பது குறித்து அவரிடம் பேசியதாகவும் தெரிவித்தார். அதற்கு ராணி, 1952-ஆம் ஆண்டு பிரதமர் நேருவுடன் தான் பேசிய ஒரு உரையாடலை நினைவுபடுத்தியதாக அவர் கூறினார். அப்போது நேரு, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ராணியிடம் தெரிவித்ததாக போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.

அந்த உரையாடலை நினைவுகூர்ந்த ராணி, இந்தியா எப்போதும் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் என்று நேரு கூறியதாக தெரிவித்ததாக போரிஸ் ஜான்சன் கூறினார். காலம் மாறினாலும் சில விஷயங்கள் தொடர்ந்து மாறாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் ரஷியா இடையேயான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவத்தை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பான அவரது கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே மேலும் வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார். ரஷியா-உக்ரைன் போர், ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி, இந்தியா-பிரிட்டன் உறவு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார். கரோனா காலத்தில் பிரிட்டனுக்கு தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா அளித்த முக்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார். இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.