கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் கலகலப்பான மற்றும் சுவாரசியமான செயல்கள் எப்போதுமே ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். அந்த வகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் போது செய்த ஒரு காரியம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

நார்தம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடி வரும் யுஸ்வேந்திர சஹால், லாங்காஷயர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சஹால் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சில் லாங்காஷயர் அணியின் பேட்டர் ஜோ மூர்ஸை போல்ட் ஆக்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

விக்கெட் வீழ்த்தியதும் வழக்கமான தனது பாணியைக் கைவிட்டு, சமீபத்தில் இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் மேதாவி பிதுரியின் ‘6-7’ (சிக்ஸ்-செவன்) கொண்டாட்டத்தை அப்படியே செய்து அசத்தினார் சஹால். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த ‘6-7’ கொண்டாட்டம் என்பது சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டெல்லி பிரீமியர் லீக் 2026 தொடரின் போது பிரபலமானது. சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியைச் சேர்ந்த 20 வயதான மேதாவி பிதுரி இந்தச் செய்கையைச் செய்தார். இரு கைகளையும் முன்னும் பின்னுமாக ஊசலாடும் பாணியில் அசைத்துக்கொண்டே “சிக்ஸ்-செவன்” என்று கூறும் இந்த ஸ்டைல், ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய இன்டர்நெட் மீமாக மாறியது.

தற்போது சஹாலும் அதே டிரெண்டை பின்பற்றி வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்களைக் சிலிர்க்க வைத்துள்ளது. சஹால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், மேதாவி பிதுரியின் அசல் கொண்டாட்டத்தையும் தனது கொண்டாட்டத்தையும் இணைத்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது சான்ஸ் கிடைக்காமல் தவித்து வந்தாலும், உள்நாட்டு மற்றும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சஹால் தொடர்ந்து தீவிரமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் அவர், மைதானத்தில் எப்போதுமே தனது ஜாலியான மற்றும் துறுதுறுப்பான சுபாவத்தால் ரசிகர்களை மகிழ்விப்பதில் வல்லவர். தற்போது அவர் செய்துள்ள இந்தச் செயல் கிரிக்கெட் வட்டாரங்களில் மீண்டும் ஒருமுறை அவரைப் பேசுபொருளாக மாற்றியுள்ளது.