உயரமான மலைப்பகுதிகளால் சூழப்பட்ட லடாக்கில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டோக் நாலா பகுதியில் இருந்து கிடைக்கும் பனிப்பாறை உருகுநீரை வீணாக ஓடவிடாமல், பாசன கால்வாய்களுக்கு திருப்பிவிடும் முயற்சியை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நீர் இகூ-ஃபேய் பாசன கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. முன்பு இந்த நீர் கீழ்நோக்கி ஓடி சிந்து நதியை சென்றடைந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதி விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 12 கிராமங்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைப்பதுடன், 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கால்வாயில் கிடைக்கும் நீர் கிராமங்களுக்கு முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கூடுதல் நீர் கிடைப்பதால், இணைக்கப்பட்டுள்ள 12 கிராமங்களுக்கும் தினசரி தண்ணீர் வழங்க முடியும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால் பயிர் விளைச்சல் அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பும் மேம்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கின் கடினமான குளிர்பாலைவன சூழலில் பெரிய செலவில்லாமல் இயற்கையாக கிடைக்கும் நீரைப் பயன்படுத்தியிருப்பது இந்த முயற்சியின் முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதேபோல் மேலும் சில நீரோடைகளில் இருந்து தண்ணீரை விவசாயத்துக்குத் திருப்பும் திட்டங்களையும் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது