சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1992-ம் ஆண்டு காணாமல் போன 2 பெல்ஜிய மலையேற்ற வீரர்களின் உடல்கள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிரிஃப்ட் பனிப்பாறையில் ஜூலை 26-ம் தேதி மலையேற்றம் சென்ற ஒருவர் மனித உடல்களை கண்டறிந்தார். இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உடல்கள் தடயவியல் மருத்துவ நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த இருவரும் 1992-ம் ஆண்டு வைஸ்மீஸ் மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றபோது கடுமையான வானிலை காரணமாக இலக்கை அடையாமல் காணாமல் போயிருந்தனர். அப்போது பல்வேறு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒரு பை மட்டுமே கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
34 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பாறை பின்வாங்கிய நிலையில் அவர்களின் உடல்கள் வெளிப்பட்டன. மீட்கப்பட்ட உடல்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1992-ம் ஆண்டு காணாமல் போன அதே இரு மலையேற்ற வீரர்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் காணாமல் போனபோது ஒருவருக்கு 39 வயதும், மற்றொருவருக்கு 41 வயதும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் புதைந்திருந்த மலையேற்ற வீரர்களின் உடல்கள் தற்போது வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன. சுவிட்சர்லாந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
