சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன், திரையுலகில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கும் போதெல்லாம் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தைத் தொடுவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி-சட்டையில் பாரம்பரிய உடையில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், அரங்கத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் மேடையில் பேசி முடித்துக்கொண்டிருந்த வேளையில், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென உரத்த குரலில் “வருங்கால முதல்வரே!” என்று ஆவேசமாகக் முழக்கமிட்டார்.

எதிர்பாராத இந்த அழைப்பைக் கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனமும் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் அவர்களின் ரசிகர்கள் இது போன்ற அரசியல் பட்டங்களைக் கொடுப்பது வாடிக்கை என்றாலும், சிவகார்த்திகேயனுக்கு இந்த அழைப்பு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.

அந்த வார்த்தையைக் கேட்ட நொடியில் சற்றும் எதிர்பாராத சிவகார்த்திகேயன், வெட்கத்துடன் புன்னகைத்து, தன் உதட்டில் விரல் வைத்து “அமைதியாக இருங்கள்” என்று சைகை காட்டினார். எந்தவித மேடை ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிமையாகவும் கியூட்டாகவும் ரசிகரின் அந்த அரசியல் முழக்கத்தை அவர் கையாண்ட விதம், அரங்கத்திலிருந்தவர்களை ரசிக்க வைத்தது. இந்தச் சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளைக் குவித்து வருகிறது.