சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளையும் வியூஸ்களையும் குவித்து பிரபலமடைவதற்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரின் மிகவும் பரபரப்பான லான்டர்ன் சதுக்க பகுதியில் போக்குவரத்து சிக்னல் எறிந்தபோது, வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. அப்போது, பிரகிருதி கவுர் என்ற சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் இளம்பெண், யாரும் எதிர்பாராத விதமாகச் சாலையின் நடுவே இருந்த ஜீப்ரா கிராசிங் பாதையில் திடீரெனப் படுத்துக்கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில், வாகன ஓட்டிகள் செல்லும் வழியில் அவர் படுத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோவிற்காக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் கோபமடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
View this post on Instagram
நடுரோட்டில் ஆபத்தான முறையில் படுத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்தூர் நகரக் காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அவரது மொபைல் போனும் காவல்துறையினரால் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, பயந்துபோன அந்தப் பெண் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது வாகனங்கள் நின்றிருந்த சில நொடூடிகளில் மட்டுமே இந்த வீடியோவை எடுத்தேன்; வேண்டுமென்று போக்குவரத்து விதிகளை நான் மீறவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக இது போன்ற பொது இடங்களிலும், ஆபத்தான முறையிலும் ஸ்டண்ட் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
