சமூக வலைதளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீத ஸ்டெண்டுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ரீல்ஸ் மோகம் எத்தகைய ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு ஒரு மிரள வைக்கும் சாட்சியாக அமைந்திருக்கிறது.

அச்சல்தா ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கடை அருகில் திடீரென ஒரு விஷப்பாம்பு நடமாடியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ரிஷி போர்வாள், துணிச்சலாக அந்தப் பாம்பைப் பிடித்துள்ளார். பாம்பை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான காட்டில் விடப்போவதாக அவர் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.

ஆனால், போகும் வழியில்தான் அந்த விபரீத யோசனை அவருக்குத் தோன்றியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்ற ‘சோஷியல் மீடியா பூதம்’ அவர் தலையில் உட்கார்ந்துள்ளது. உடனே, பாம்புடன் ஸ்டண்ட் செய்து வீடியோ எடுக்க நண்பர்களை ஏற்பாடு செய்துள்ளார். வீடியோ சூட்டிங்கின் உச்சக்கட்டமாக, ரிஷி செய்த காரியம் அனைவரையும் உறைந்துபோகச் செய்தது. பாம்பின் தலைக்கு அருகில் விளையாடியவர், நேராக பாம்பின் வாய்க்குள் தனது கட்டைவிரலை நுழைத்துள்ளார்!

ஆபத்தை உணர்ந்த அந்தப் பாம்பு, ஆத்திரமடைந்து ரிஷியின் விரலில் வேகமாக கடித்தது. வலியால் அலறிய ரிஷி கையை விலக்க முயன்றபோது, பாம்பு விடாமல் அடுத்துடுத்து மூன்று முறை அவரைத் தீண்டியது. ஒரே நொடியில் சுதாரிப்புக்கு வந்த வாலிபரின் முகத்தில் பயம் அறைந்தது; உடனடியாகப் பாம்பை அங்கேயே தூக்கி வீச, அது மளமளவென்று செடிகளுக்குள் மறைந்தது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த கூட்டத்தினருக்கு ரத்தம் உறைந்துபோனது. ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே இதைக் கையாண்ட ரிஷி, சுற்றியிருந்தவர்கள்  எச்சரித்த பின்னர்தான் தான் செய்த முட்டாள்தனத்தை உணர்ந்து நடுங்க ஆரம்பித்தார். இருப்பினும், அன்றைய தினம் பாம்பு கடித்ததற்காக அந்த வாலிபர் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.