கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிர்வார் அருகே உள்ள ஹொக்ரானி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி (21) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இரவு நேரத்தில், அஸ்வினி தனது வீட்டை விட்டு வெளியே இயற்கை உபாதைக்காகச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் அவரைப் பல இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள ஒரு கிணற்றில் அஸ்வினி சடலமாக மிதப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அஸ்வினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அஸ்வினியை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது.

​இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிர்வார் காவல் துறையினர், இந்த கொடூரக் கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4 பேரைப் பிடித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.