சமூக வலைதளங்களில் காதலா, பணமா அல்லது கல்யாணத்தில் யாருக்கு முன்னுரிமை என்ற விவாதங்கள் எப்போதுமே சூடுபிடிக்கும். ஆனால், எக்ஸ் (X) தளத்தில் @Mahiixz என்ற பயனர் பகிர்ந்த ஒரு பதிவு, இந்த விவாதத்தை நெட்டிசன்கள் மத்தியில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. “ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் குறைவான சம்பளம் வாங்கும் ஆண்கள் திருமணத்தைப் பற்றி நினைக்கவே கூடாது” என்று அவர் அடித்துக் கூறியதுதான் தற்போது பெரும் தீயாய் பரவி வருகிறது.
அந்த வைரல் பதிவில், “திருமணம் என்பது வெறும் உணர்ச்சிகளாலும் அன்பாலும் மட்டும் ஓடிவிடாது; அதற்கு வலுவான பொருளாதார அடித்தளம் அவசியம்” என்று வாதிடப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் காரணமாக பிற்காலத்தில் வாழ்க்கைத்துணை பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனவே, ஆண்கள் முதலில் தங்கள் கேரியரில் கவனம் செலுத்த வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும், குறைந்தபட்சம் 12 லட்சம் ஆண்டு வருமானம் என்ற இலக்கைத் தொட்ட பிறகே திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைக் கருத்து இன்டர்நெட்டை இரண்டாகப் பிளந்துள்ளது. ஒரு தரப்பினர் இதனை ஆமோதிக்க, மற்றொரு தரப்பினரோ இதற்கு எதிராகக் கொந்தளித்துள்ளனர். இந்த யோசனையைக் கண்ட பலரும் இதனை ‘ரேஜ் பெய்ட்டிங்’ (Rage Baiting – மக்களை வேண்டுமென்றே கோபமூட்டி ரீச் தேடும் வித்தை) என்று விமர்சித்துள்ளனர்.
ஒரு பயனர், “நீங்க அவங்களோட சம்பளத்தைக் வச்சுதான் ஜாலியா இருக்கப் போறீங்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மற்றொருவரோ, “இதன் அர்த்தம் உங்கள் குடும்பத்தினர் அல்லது பார்ட்னர் ஆரம்பத்தில் மாதத்திற்கு 1 லட்சம் சம்பாதித்தார்கள்?” என்று நக்கலாக பதிவிட்டார்.
Men earning below ₹12 LPA should NOT think about marriage.
Marriage isn’t just about love it’s also about financial stability. If your income is too low, it can make life financially difficult for your partner.
Build your career. Increase your income. Above 12 LPA Then think…
— Chaipaglu (@Mahiixz) August 13, 2026
இதற்கிடையில், சொந்த வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு தரப்பினரோ, “நான் கல்யாணம் செய்தபோது எனது சம்பளம் இதைவிட ரொம்பக் குறைவு. திருமணத்திற்குப் பணத்தைவிட மன அமைதியும் புரிதலும்தான் முக்கியம். பணக்காரர்களிடையேதான் விவாகரத்து அதிகமாக நடக்கிறது, ஏழைகளிடம் அல்ல” என்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். சிலரது கருத்துப்படி, திருமணச் செலவுகளும் மகிழ்ச்சியும் பேக்கேஜைப் பொறுத்தது அல்ல, மாறாக தனிநபரின் வாழ்க்கை முறையையும் பரஸ்பர புரிதலையும் பொறுத்தே அமைகிறது.
