உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிரவைத்துள்ளது.  அதாவது பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமபால். இவரது 17 வயது மகள் லதா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 28 அன்று காலை, லதாவை மிளகாய் தோட்டத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு அழைத்துச் சென்றுள்ளார் அவரது சொந்தச் சித்தப்பா  ஜெயப்பிரகாஷ்.

ஆனால், மாலையில் ஜெயப்பிரகாஷ் மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். லதா எங்கே என்று குடும்பத்தினர் கேட்டபோது, “அவளுக்குப் பக்கத்து ஊர் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்தது, அதனால் அவனுடன் ஓடிவிட்டாள்” என்று கூசாமல் பொய் சொல்லியுள்ளார். குடும்பத்தினரும் மானம், மரியாதை பயத்தால் வெளியே சொல்லாமல் ரகசியமாகத் தேடியுள்ளனர். ஆனால் நாட்கள் கடந்தும் உண்மை மறைக்கப்படவில்லை; போலீசாருக்குத் தகவல் சென்றது.

போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, ஜெயப்பிரகாஷின் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் சொன்ன அனைத்துப் பொய்களும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின. குடும்பத்தின் மரியாதை கெட்டுவிட்டதாகக் கூறி, தனது சொந்த அண்ணனின் மகளைத் தானே  கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதாகக் ஒப்புக்கொண்டார் ஜெயப்பிரகாஷ்.

கொலை செய்ததோடு நில்லாமல், சடலத்தை மிளகாய் தோட்டத்திலேயே ரகசியமாகத் தோண்டிப் புதைத்துள்ளனர். ஆகஸ்ட் 18 அன்று போலீசார் அந்தத் தோட்டத்தைத் தோண்டி லதாவின் அழுகிய சடலத்தை மீட்டனர். இந்த வழக்கில் போலீசாரையே அதிரவைத்த மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இறந்த பின்னரும் அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை. லதாவின் ஆவி ‘பேயாக’ மாறி தன்னை வந்து பிடித்துவிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையில், அவளது இரண்டு கால்களிலும் தலா மூன்று பெரிய இரும்பு ஆணிகளைச்  சேர்த்து அடித்துள்ளான் அந்த நயவஞ்சகன்.

சிறுமியின் கால்களில் அடிக்கப்பட்ட அந்த ஆணிகளையும் போலீசார் விசாரணையின் ஒரு பகுதியாகக் கைப்பற்றியுள்ளனர். எஸ்.எஸ்.பி அனுராக் ஆர்யா அவர்களின் உத்தரவின் பேரில் கொடூரக் குற்றவாளி ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சதியில் பெற்றோருக்கு ஏதேனும் பங்குள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணின் சுதந்திரமும், குடும்பத்தின் போலி கவுரவமும் சேர்ந்து ஒரு இளம் உயிரை  மண்ணுக்குள் புதைத்துள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.