சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் திட்டம் குறித்த விவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சைக் கேட்டு ஆவேசமடைந்த திமுக மூத்த தலைவர் கே.என். நேரு குறுக்கிட்டுப் காரசாரமாகப் பேசினார். ​”எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அரசு வீடு பெறுவது அவரது சட்டப்பூர்வ உரிமை. நாங்கள் ஒன்றும் கார் வேண்டும் எனக் கெஞ்சவில்லை.

அமைச்சராக இருக்கும் சிலர் சொந்த வீட்டில் வசதி செய்துகொண்டே அரசு தரும் வாடகையைப் பெறுகிறீர்கள், முடிந்தால் அதை வேண்டாம் என எழுதித் தாருங்கள்” எனக் காட்டமாகச் சவால் விடுத்தார் கே.என். நேரு. இதற்கு உடனே அவையில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கையில் வெறும் ₹10,000 மட்டுமே இருக்கிறது என எழுதி வைத்துவிட்டு, வெளியே ரேஞ்ச் ரோவர் (Range Rover) சொகுசு காரில் வலம் வரக்கூடிய போலி எம்.எல்.ஏ-க்கள் எங்கள் தமிழக வெற்றி கழகத்தில் கிடையாது.

ஊழல் செய்யாத நேர்மையான எம்.எல்.ஏ-க்களுக்கு மக்கள் சேவை செய்ய இந்த கார் திட்டம் மிகவும் அவசியமானது” என அக்குவேறு ஆணிவேறாகப் பதிலடி கொடுத்தார்.
​கே.என். நேருவின் சவாலும், அதற்குத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த அதிரடி பதிலடியும் சட்டமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.