தமிழகச் சட்டமன்றத்தில் சட்டத்துறை மற்றும் எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக மின்சாரத் துறை குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக ஆட்சியில் மின்வாரியம் சரிவர நிர்வகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேச எழுந்த அமைச்சர் நிர்மல் குமார், கடந்த சில ஆண்டுகளில் மின்சார வாரியம் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார். அப்போது செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு அவைக்குறிப்பில் இல்லாத சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த வார்த்தையை வாபஸ் பெறுவதாக நிர்மல் குமார் தெரிவித்து, வார்த்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நிர்மல் குமாரை விமர்சிக்கும் வகையில் பேசியதால் அவையில் மீண்டும் காரசார விவாதம் ஏற்பட்டது. இதற்குப் பதிலளித்த நிர்மல் குமார், எதிர்த்தரப்பினர் தவறாகப் பேசினால் தங்களுக்கும் பேசத் தெரியும் என்று கூறி ஒரு கருத்துத் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த உதயநிதி, “தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க ஒரு அமைச்சரை வைத்திருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வாக்குவாதத்தில் ஆதவ் அர்ஜுனாவும் தலையிட்டுப் பேச முயன்றார். அப்போதும் திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் களேபரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, மின்சாரத் துறை தொடர்பான புள்ளிவிவரங்களுடன் கூடிய கேள்விகளைத் தான் முன்வைத்ததாகவும், யார் முதலில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையில் போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, அமைச்சரவை மாற்றம் மற்றும் நிர்வாக முடிவுகள் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை என்று கூறிப் பதிலளித்தார்.
