கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை எதிர்கொள்வது சுலபம். ஆனால், வாழ்க்கையின் வளைவுகளில் பந்து வீசப்படும் கூர்மையான கணங்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின் கடந்த இரண்டு தசாப்தங்களாக அனுபவித்துள்ளார்.

1999 முதல் 2001 வரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜேக்கப் மார்ட்டின், தற்போது தனது 54-வது வயதில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட நிழலில் இருந்து முழுமையாக வெளிவந்துள்ளார். டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அவரை 22 ஆண்டுகள் நீடித்த ஒரு போலி ஆவண வழக்கு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும், நீண்ட காலப் போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதியாகவும் அமைந்துள்ளது.

இந்தச் சிக்கலின் ஆரம்பப் புள்ளி 2004-ம் ஆண்டு. ஜேக்கப் மார்ட்டின் தலைமையிலோ அல்லது அவரது ஏற்பாட்டிலோ ஒரு கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிவிட்டுத் திரும்பியது. அந்த அணியில் இடம்பெற்ற ஒரு வீரர், தனது 6 மாத விசா காலம் முடிந்தும் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் மற்றும் இமிக்கிரேஷன் முத்திரையைப் பெற்றுக்கொண்டு இந்தியா திரும்பிய போது, தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர் சிக்கினார்.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து தொடரப்பட்ட வழக்கில், ஆரம்பத்தில் ஜேக்கப் மார்ட்டினின் பெயர் எங்குமே இல்லை. ஆனால், அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதும், அப்போது பிரபலமாக இருந்ததும் காரணமாக, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த ஒற்றை வழக்கால் ஜேக்கப் மார்ட்டினின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. தொடர் விசாரணைகள், நீதிமன்ற அலைச்சல்கள் மற்றும் அப்போதைய பிசிசிஐ தரப்பிலிருந்தும் உரிய பதில்கள் கிடைக்காதது அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தனது ரயில்வே வேலையையும் இழக்க நேரிட்டது.

“என் பெயர் எப்.ஐ.ஆர்-லேயே இல்லை, ஆனால் நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் என் மீது பழிபோடப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக பதில் தேடி அலைந்தேன். ரயில்வே வேலையை இழந்தேன். பலத்த மன அழுத்தத்திற்கு ஆளானேன்” என்று கலங்கிய கண்களுடன் அவர் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான சட்டப்போராட்டத்திற்குப் பின், போதிய மற்றும் நம்பகமான சாட்சிகள் இல்லை எனக் கூறி டெல்லி நீதிமன்றம் அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது.

“இந்தத் தீர்ப்பு எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய சுத்தமான சட்டை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய யூ-டர்ன்” என்று ஜேக்கப் மார்ட்டின் மிகுந்த நிம்மதியுடன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களை விட, இந்த 22 ஆண்டு கால போராட்டத்திலிருந்து அவர் பெற்ற இந்த வெற்றி மிகவும் வலிமையானது.