கழிவறைக்கு சென்றதும் அவசரமாக வெளியே வராமல், செல்போன் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் அமருவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஆனால், கழிவறையில் தேவைக்கு அதிகமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலுக்கு நல்ல பழக்கம் அல்ல. குறிப்பாக, கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்து முக்குவது மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் மூலநோய் எனப்படும் ஹெமராய்ட்ஸ் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக மலச்சிக்கல் உள்ளவர்கள் கழிப்பறையில் அதிக நேரம் அமர்ந்து முக்குவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
கழிவறையில் தேவையான நேரத்தை மட்டும் செலவிடுவது நல்லது. பொதுவாக, சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டு வெளியே வருவது நல்ல பழக்கமாகக் கருதப்படுகிறது. மலம் வரவில்லை என்றால் நீண்ட நேரம் அமர்ந்து முயற்சி செய்வதற்குப் பதிலாக சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யலாம். கழிப்பறையில் செல்போன் பயன்படுத்தும் பழக்கத்தையும் தவிர்ப்பது நல்லது.
மலச்சிக்கலைத் தவிர்க்க போதுமான தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுதானியங்களை உணவில் சேர்ப்பது உதவும். கழிப்பறைக்குச் செல்லும் போது தொடர்ந்து வலி, ரத்தப்போக்கு, கடுமையான மலச்சிக்கல் அல்லது ஆசனவாய் பகுதியில் வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
