தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற விவாதம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பேரவையின் நடைமுறைகள் மற்றும் அவைக்குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “சட்டமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளுங்கட்சியினரின் பேச்சுகளே முதல் முறையாக அதிகளவில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அந்தப் புதிய வரலாற்றை அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் படைத்துள்ளார்” என்று நகைச்சுவையுடன் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவது குறித்துப் பேசிய அவர், பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து கருத்துகள் நீக்கப்படும் நடைமுறை தற்போதைய டிஜிட்டல் சூழலில் பயனற்றதாக மாறிவருகிறது என்று சுட்டிக்காட்டினார். “அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என நீங்கள் தொடர்ந்து நீக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பேச்சுகள் உடனடியாக ரீல்ஸாக மாற்றப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலால் அவைக்குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவதற்கான அடிப்படை அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் நேரலையை நாங்கள்தான் அறிமுகப்படுத்தியதாக கூறி இருந்த நிலையில் திமுக தான் முதலில் நேரலையை கொண்டு வந்தது எனவும் பதிலடி கொடுத்தார். மேலும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இது பற்றி பேசும்போது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறும் போது அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குவது மரபு. அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து ஓரிரு காட்சிகளை உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பியுள்ளேன். மேலும் அவை குறிப்பிலிருந்து நான் நீக்காத வகையில் உறுப்பினர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று கூறினார்.
