சமூக வலைதளங்களில் தற்போது காகம் ஒன்றின் புத்திசாலித்தனத்தை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக காகங்கள் புத்திசாலியான பறவைகள் என்று கூறப்படும் நிலையில், இந்த வீடியோ அதை மீண்டும் நிரூபிப்பது போல் அமைந்துள்ளது. வீடியோவில் காகம் தனது அலகில் வைத்திருக்கும் பிஸ்கெட்டை நேரடியாக சாப்பிடாமல், அருகில் இருந்த தண்ணீரில் நனைக்கிறது. பின்னர் பிஸ்கெட் மென்மையானதும் அதை சுவையாக சாப்பிடுகிறது.
காகம் ஒரு முறை மட்டும் இவ்வாறு செய்வதில்லை என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். ஒவ்வொரு முறையும் பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து, சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் அதை சாப்பிடுகிறது. கடினமாக இருக்கும் பிஸ்கெட்டை மென்மையாக்குவதற்காக காகம் இப்படி செய்வது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப் பார்த்த பலரும், “இந்த காகம் நம்மைவிட புத்திசாலியாக இருக்கிறதே” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
காகங்களின் புத்திசாலித்தனம் குறித்து ஏற்கெனவே பல சம்பவங்கள் பேசப்பட்டுள்ளன. சிறுவயதில் நாம் படித்த தாகம் எடுத்த காகத்தின் கதையும் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. தண்ணீர் குறைவாக இருந்த குடத்தில் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு, தண்ணீரை மேலே வரச் செய்து காகம் குடித்ததாக அந்தக் கதையில் கூறப்படும். தற்போது வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தவர்கள், அந்தக் கதையை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
“தாகம் எடுத்த காகம்” கதையில் கற்களை பயன்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்ட காகம், இப்போது பிஸ்கெட்டை மென்மையாக்க தண்ணீரை பயன்படுத்துவதாக இணையவாசிகள் ரசித்து வருகின்றனர். ஒரு சிறிய பிரச்சினையை புரிந்துகொண்டு அதற்கேற்ற வழியை காகம் தேர்வு செய்வது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பழைய கதையில் பார்த்த காகம் தற்போது புதிய முறையில் தனது புத்திசாலித்தனத்தை காட்டுவதாக கூறி, இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
