அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தம்பதியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலைக்காக செல்லும் இளைஞர்கள், அமெரிக்கா செல்லும் முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சுஹாஸ் மற்றும் பிரியங்கா என்ற அந்த தம்பதியின் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் தங்களது அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற கனவு பல இந்திய இளைஞர்களிடம் இருந்து வருகிறது. குறிப்பாக உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக அமெரிக்கா செல்ல பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகு எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் என இந்த தம்பதி கூறியுள்ளனர். குறிப்பாக விசா தொடர்பான நிச்சயமற்ற தன்மை பலருக்கும் கவலையை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by NDTV Profit (@ndtvprofit)

மேலும், வெளிநாட்டில் வசிக்கும் போது கலாசார வேறுபாடுகளையும் சில நேரங்களில் பாகுபாடு போன்ற அனுபவங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தம்பதி கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான அவர்களின் வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவர்களின் அனுபவத்தை ஆதரித்தாலும், மற்றவர்கள் அமெரிக்காவில் தங்களுக்கு கிடைத்த நல்ல அனுபவங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த வீடியோ புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

அமெரிக்கா செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை ஒரே மாதிரியாக இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். படிப்பு, வேலை, விசா நிலை, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல விஷயங்களை முழுமையாக ஆராய்ந்த பிறகே வெளிநாடு செல்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே இந்த விவாதத்தின் முக்கிய கருத்தாக உள்ளது. சுஹாஸ் மற்றும் பிரியங்காவின் வீடியோ, வெளிநாடு செல்லும் கனவு குறித்து இளைஞர்கள் மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.