மகாராஷ்டிர மாநிலம் காராட் பகுதியில் முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று குடியிருப்பு வளாகங்களுக்குள் புகுந்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தையும் காவல்துறையையும் சற்றும் மதிக்காமல், முகத்தை மாஸ்க்குகளால் மறைத்துக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்குள் புகுந்து இந்தக் கும்பல் நடத்தியுள்ள அராஜகம், ஊரின் பாதுகாப்பு அமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
காராட் நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் நள்ளிரவில் புகுந்த இந்த முகமூடிக் கொள்ளையர்கள், பூட்டியிருந்த பல வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியுள்ளனர். அபார்ட்மென்ட் வளாகத்தின் உள்ளே சத்தமில்லாமல் நுழைந்த அந்த மர்ம நபர்கள், ஒவ்வொரு தளமாகச் சென்று வீடுகளின் வாசல்களைச் சோதனையிட்டு, வந்துள்ளனர்.
ஆளில்லாத வீடுகளைக் குறிவைத்து இந்தக் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். குடியிருப்பாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில், ஒரே இரவில் அடுத்தடுத்து பல வீடுகளின் கதவுகளை உடைத்து அவர்கள் நடத்தியுள்ள இந்த வெறியாட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் எழுந்து பார்த்த குடியிருப்பாளர்கள், வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நகைகளும் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சியில் உறைந்துபோயினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலிசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
முகமூடி அணிந்திருந்ததால் கொள்ளையர்களின் முகங்களை அடையாள காண்பதில் சிரமம் நிலவினாலும், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலிசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தொடரும் இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் காராட் பகுதி மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
