திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழையும் பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிந்தைய பண ஆசையும், தொடர்ச்சியான மன உழைச்சலும் எத்தகைய கொடூரமான முடிவைக் கொடுக்கும் என்பதற்குச் சான்றாக மாடலும் நடிகையுமான ட்விஷா சர்மாவின் மரண வழக்கு மாறியுள்ளது.
போபாலில் நிகழ்ந்த இவரது விசித்திரமான மற்றும் சோகமான மரணம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விரிவான குற்றப்பத்திரிகை, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறிய நிதி ரீதியான சித்திரவதைகளையும் கொடுமைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
கணவன் மற்றும் மாமியார் அளித்த தொடர் மன அழுத்தமே ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறிக்கும் அளவுக்குத் தள்ளியுள்ளது என்பது இந்த விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது. ட்விஷாவின் டிமேட் கணக்கில் இருந்த சுமார் ₹20 லட்சம் மதிப்புள்ள பங்குகளைத் தன் கணவர் சமர்த் சிங் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றதே இந்த விபரீதத்தின் முக்கியப் புள்ளியாக அமைந்தது.
அந்த பணத்தைக் கொண்டு சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் ஈட்டலாம் என சமர்த் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பணம் தனது தந்தைக்குச் சொந்தமானது எனக் கூறி ட்விஷா தர மறுத்ததால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
கூட்டு வங்கி முறையில் கணக்குத் தொடங்கி பணத்தை மாற்றச் சொல்லி வற்புறுத்தியது மட்டுமின்றி, ட்விஷாவின் வேலை இழப்பைக் சுட்டிக்காட்டி ஆங்கிலம் பேசத் தெரியாததால் தான் வேலை போனது என உருவக் கேலி மற்றும் மனரீதியான இழிவுகளையும் கணவன் அரங்கேற்றியுள்ளார்.
ட்விஷா உயிரிழந்த அந்த நள்ளிரவுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தன் தோழியிடம் “என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியாகச் சாக விடுங்கள்” என்றும், “உன் சகோதரனிடம் அவனுடைய மனைவியின் உடலை நாளை வந்து எடுத்துக்கொள்ளச் சொல்” என்றும் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
தொடர் சித்திரவதை, கண்காணிப்பு மற்றும் பண ஆசையால் தள்ளப்பட்ட அந்தப் பெண், வேறு வழியின்றி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதைச் சிபிஐயின் குற்றப்பத்திரிகை ஆவணப் பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் பணப் பேராசையும் வரதட்சணை ரீதியான கொடுமைகளும் ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை எவ்வாறு ஒட்டுமொத்தமாக அழித்து விடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான எச்சரிக்கையாக நிற்கிறது
