பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஷாரூக் கானின் மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ள ‘மன்னத்’ இல்ல வளாகத்தில் இரண்டு பாம்புகள் புகுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரளும் இந்த பிரம்மாண்ட வீட்டின் புல்வெளி பகுதியில் இரவில் பாம்புகளின் நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து, உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  மும்பையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாகப் பாம்புகளின் வாழ்விடங்களில் நீர் சூழ்ந்ததால், அவை உலர்ந்த இடங்களைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அங்கீகாரம் பெற்ற பாம்பு மீட்பாளர் விக்கி தூபே, உடனடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். வீட்டின் முற்றத்தில் இருந்த ஒரு ஏணியின் அடியில் சுருண்டு படுத்திருந்த சுமார் 8 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான பாம்பை அவர் திறம்பட மீட்டார்.

அந்த பாம்பு ‘தாரைசாரை’ வகையைச் சேர்ந்தது என்பதும், அது மனிதர்களுக்கு ஆபத்தில்லாத முற்றிலும் விஷமற்ற பாம்பு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனத்துறையின் வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது.

இருப்பினும், அதே வளாகத்தில் காணப்பட்ட மற்றொரு பாம்பு, ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டு தப்பி ஓடி மறைந்துவிட்டது. இரவு வெகு நேரம் வரை தேடியும் அந்த இரண்டாவது பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மன்னத் இல்லத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷமற்ற பாம்பாக இருந்தாலும், மன்னத் போன்ற ஒரு அதிமுக்கிய பாதுகாப்பு நிறைந்த பிரபலத்தின் வீட்டில் பாம்புகள் நுழைந்த சம்பவம், பாலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேச்சாக மாறியுள்ளது.