டெங்கு காய்ச்சலின்போது அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி அல்லது ஒருமுறை வாந்தி ஏற்படுவது மட்டும் இருந்தால் அது நோயின் பொதுவான அறிகுறியாக இருக்கலாம்.
ஆனால் வாந்தி தொடர்ந்து ஏற்படுவது முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒரு மணி நேரத்தில் 3 முறைக்கு மேல் அல்லது 6 மணி நேரத்தில் 4 முறைக்கு மேல் வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ மதிப்பீடு தேவைப்படலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோல் கடுமையான அல்லது தொடர்ந்து இருக்கும் வயிற்றுவலி, ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக்கசிவு, வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், அதிக சோர்வு, அமைதியின்மை அல்லது மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது. டெங்குவின் தீவிர அறிகுறிகள் காய்ச்சல் குறையத் தொடங்கிய 12 முதல் 24 மணி நேரத்திலும் தோன்றக்கூடும் என்பதால், காய்ச்சல் குறைந்துவிட்டது என்று மட்டும் நினைத்து கவனத்தை குறைக்கக் கூடாது.
டெங்கு தீவிரமடையும் போது உடலில் திரவம் கசிவு, அதிர்ச்சி நிலை, கடுமையான ரத்தக்கசிவு அல்லது முக்கிய உறுப்புகள் பாதிப்பு ஏற்படலாம். இவை மருத்துவ அவசரநிலைகளாகும். எனவே டெங்கு சந்தேகம் அல்லது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து வாந்தி, கடுமையான வயிற்றுவலி, ரத்தக்கசிவு, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது மிகவும் முக்கியம்.
