மகாராஷ்டிர மாநிலத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமான ரீல்ஸ் நட்சத்திரங்கள் தாதாக்களைப் போல மாறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்கான் பகுதியில் உள்ள ‘கஃபே ஃபிளையிங் ஜிப்ஸி’யில், 19 வயதான சமூக ஊடகப் பிரபலம் அதர்வா ஜக்தாப் என்பவரை ஒரு கும்பல் கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரீல்ஸ் நட்சத்திரம் மாதவி கும்பார் உட்பட 7 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாக்கப்பட்ட அதர்வா ஜக்தாப்பும், கைது செய்யப்பட்டுள்ள மாதவி கும்பாரும் சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்ட ரீல்ஸ் பிரபலங்கள் ஆவர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சாகசக் காட்சி படப்பிடிப்பின் போது நடந்த கார் விபத்து தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இந்த பழைய பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கஃபேவில் அதர்வாவைப் பார்த்த மாதவியும் அவரது தோழர்களும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அதர்வாவின் தலையிலும் உடலிலும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராம் லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் தொடர்பான போட்டியும் இந்த மோதலுக்கு ஒரு முக்கியக் காரணமாகப் பேசப்படுகிறது.
கல்வி நகரமாக விளங்கும் பகுதியில், இளைஞர்கள் சமூக வலைதளப் புகழைத் தவறாகப் பயன்படுத்தி வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் பிரபலங்களே இப்படி ஆயுதங்களைக் கையில் எடுத்து ரவுடிசம் செய்யத் தொடங்கினால் சாதாரண மக்களின் பாதுகாப்பு என்னவாகும் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
