தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவையிலேயே எழுந்து எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசுகையில், தி.மு.க. மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தாக்கினார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அவையிலிருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனைக் கவனித்த சபாநாயகர், அமைச்சரை அமைதியாக இருக்கும்படி பலமுறை அறிவுறுத்தினார். இருப்பினும் நிலைமை கட்டுக்குள் வராததால், அதிருப்தி அடைந்த சபாநாயகர் வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை உடனடியாகத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்.
அவையில் திடீரென ஏற்பட்ட இந்தச் சலசலப்பு மற்றும் பதற்றமான சூழலைத் தணிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் உடனடியாக எழுந்து விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது; அவரது அந்தப் பேச்சு தேவையற்றது. அமைச்சர் தரப்பில் செய்யப்பட்ட இந்தச் செயலுக்காக எதிர்க்கட்சிகளிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதாவது சட்டப்பேரவையில் கலைஞரின் பெயரை சொல்லி அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய நிலையில் அதற்கு ஓபிஎஸ் பதிலடி கொடுக்க திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு முன்னாள் முதல்வர் என்றுதான் கூற வேண்டும் என கூறி முதலமைச்சர் விஜய் அவர் பேசியது தவறு என கூறியதோடு மன்னிப்பும் கூறினார்.
மேலும் சட்டப்பேரவையில் ஒரு துறையின் அமைச்சர் பேசிய பேச்சுக்காக, மாநிலத்தின் முதலமைச்சரே நேரடியாக எழுந்து மன்னிப்பு கோரிய இந்தச் சம்பவம் பேரவையின் மற்ற உறுப்பினர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
