வரலட்சுமி விரதம் என்பது திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருக்கவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி அஷ்டலட்சுமிகளையும் வழிபடும் மிக முக்கியமான நாளாகும். பக்தர்கள் அன்னை மகாலட்சுமியைக் கலசத்தில் எழுந்தருளச் செய்து, தங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேட்டுப் பெறும் அற்புத நாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையிலோ இந்த விரதம் அனுசரிக்கப்படும். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அமைகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து காலையிலோ அல்லது மாலையிலோ அம்பிகைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
ஸ்கந்த புராணத்தின் படி, சாருமதி என்ற பெண் பார்வதி தேவியின் அறிவுறுத்தலின்படி தன் ஊர் பெண்களுடன் இணைந்து வரலட்சுமி விரதத்தைப் பூஜித்தார். பூஜை முடிவில் அம்மனின் அருள் கிடைத்து, அவர்களின் வீடுகளில் எதிர்பார்க்காத அளவிற்குச் செல்வம் பெருகியதாகக் கூறப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே பல தலைமுறைகளாகப் பெண்கள் இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
பூஜை செய்யும் போது வீட்டைச் சுத்தம் செய்து, சிறிய பீடத்தில் அரிசி அல்லது நீர் நிரப்பிய கலசத்தை வைத்து, தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். பிறகு அம்மனுக்குப் புதிய புடவை, நகைகள், மலர்கள் மற்றும் மஞ்சள்-குங்குமம் அணிவித்து, கலசத்தில் அஷ்டலட்சுமிகளும் எழுந்தருள வேண்டும் என்று வேண்டி எளிய மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.
பூஜையின் போது ஒன்பது முடிச்சுகள் போட்ட மஞ்சள் நூலை அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டு கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். மேலும் வளையல், தாலிக்கயிறு, பழங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியத்தைப் படைத்துத் தீபாராதனை காட்ட வேண்டும். பின்னர் அந்தப் பிரசாதத்தையும் தாம்பூலத்தையும் சுமங்கலி பெண்களுக்கு வழங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
