வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் கடும் உழைப்பிற்குப் பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகும் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

பகல் நேரப் பணிக்குப் பிறகு இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவர் படித்துள்ளார். இவருடைய லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த இவரது மனைவி, தினமும் அதிகாலை 4 மணிக்கே இவரை எழுப்பி தேநீர் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். கடந்த 2023 முதல் 2025 வரை விடாமல் முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பயிற்சி செய்து தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். முதல் முயற்சியில் தமிழில் எழுதியபோது தோல்வியடைந்த நிலையில், மனம் தளராமல் ஆங்கில மொழிக்கு மாறி தனது இரண்டாவது முயற்சியில் வெற்றியைக் கைப்பற்றியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கான வயது வரம்பை நீக்கிய தீர்ப்பே இத்தகைய சாமானியர்களின் மருத்துவக் கனவு நனவாகிடப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“>

 

வயது மற்றும் சூழ்நிலைகளைக் கடந்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இவர் சாதித்துள்ள இந்தச் சாதனை பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.