ஹைதராபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய திருடன் ஒருவன், தப்பிச் செல்வதற்குப் பதிலாக அந்த வீட்டிலேயே தூங்கிப்போன விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அந்த நபர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த அந்த நபர், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகளைத் திருடியுள்ளார். நகைகளைத் திருடிய பிறகு அங்கிருந்து தப்பியோடாமல், போதையின் காரணமாக அந்த வீட்டின் அறையிலேயே சுருண்டு விழுந்து தூங்கிப்போயுள்ளார்.

வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்தபோது, பீரோ திறக்கப்பட்டுப் பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அறையின் தரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். அவனிடம் சோதனையிட்டபோது, திருடப்பட்ட தங்க நகைகள் அவன் பாக்கெட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவனை எழுப்பாமல், நடக்கும் இந்த விசித்திரமான சம்பவத்தை வீட்டின் உரிமையாளர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

“>

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போதையில் தூங்கிக் கொண்டிருந்த திருடனைக் கைது செய்து, அவனிடமிருந்த தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபருக்கு வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.