உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அரங்கேறிய ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் காவல்துறை அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நடைபெற்ற இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷோரூமிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், எப்பேர்ப்பட்ட அவசரமும் இல்லாமல் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் அமைதியாக நேரத்தைச் செலவிட்டுள்ளார். அதுவும் வெறும் திருடுவதோடு நின்றுவிடாமல், அவர் செய்த சேட்டைகளைக் ஷோரூமில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொன்றாகப் பதிவு செய்துள்ளன.
வழக்கமாகத் திருடர்கள் என்றால் அவசர அவசரமாகத் திருடிவிட்டுத் தப்பியோடத்தான் பார்ப்பார்கள். ஆனால், இந்த விசித்திரத் திருடனோ ஷோரூம் தனது சொந்த வீடு போல சாவகாசமாக நடந்து கொண்டுள்ளார். ஷோரூமிற்குள் நுழைந்தவுடன் எந்தவித டென்ஷனும் இல்லாமல் காபி தயாரித்து சுவைத்து குடித்துள்ளார். அதன்பிறகு அங்கேயே குளித்துவிட்டு, தனது ஆடைகளையும் சலவை செய்து காயவைத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விசித்திரமான நபரின் உச்சக்கட்டச் சேட்டையாக, பாலிவுட்டின் புகழ்பெற்ற “லுங்கி டான்ஸ்” பாடலுக்கு ஷோரூமிற்குள்ளேயே உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
இந்த அசாதாரணமான காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், “பாய் திருடுறதுக்கு முன்னாடி ஷோரூம்ல செம ஜாலியா என்ஜாய் பண்ணியிருக்கார்” என்றும், “வேலையை நேசி, அப்படி இல்லன்னா நேசிச்ச வேலையைச் செய்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Varanasi: A thief spent 4 hours inside a bike agency, made coffee, took a bath, danced to music, and even dried his clothes before fleeing with the manager’s ₹4.70 lakh KTM bike😭💀 pic.twitter.com/6C5cdMOhnM
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 13, 2026
இப்படியே கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் ஷோரூமிற்குள் பொழுதைப்போக்கிய அந்த நபர், இறுதியில் ஷோரூம் மேலாளருக்குச் சொந்தமான சுமார் ரூ.4.71 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கேடிஎம் (KTM) மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வாரணாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷோரூமில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்தத் திருடனைத் தேடும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
