இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. இலங்கை மண்ணில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், அவர்களின் பலவீனத்தை கருத்தில் கொண்டே இலங்கை அணி தனது பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் 4 முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக இடது கை பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான விஸ்வா பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெர்னாண்டோவுக்கு டெஸ்ட் போட்டிகளில் முன் அனுபவம் உள்ள நிலையில், மதுஷங்கா இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
சுழற்பந்து வீச்சிலும் இலங்கை அணி இதே வியூகத்தை பின்பற்றியுள்ளது. பிரபாத் ஜெயசூர்யாவுடன் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சோனல் தினுஷாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இடது கை பந்துவீச்சை அதிகமாக பயன்படுத்த இலங்கை அணி திட்டமிட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங்கை கட்டுப்படுத்த இந்த பந்துவீச்சாளர்கள் முக்கிய ஆயுதமாக இருக்கலாம்.
இலங்கை மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதே நேரத்தில், இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையின் இந்த வியூகம் எந்த அளவுக்கு பலன் தரும் என்பது தெரியவரும். இந்திய பேட்ஸ்மேன்கள் இலங்கையின் பந்துவீச்சு வலையில் சிக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
