நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்வதற்காக ‘மூன் பேஸ்’  எனப்படும் பிரத்யேகத் தங்குமிடத்தை அமைக்கும் மெகா திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை  இணைந்து செயல்பட அமெரிக்காவின் நாசா நிறுவனம் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவு, உலகளாவிய அறிவியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் நடைபெற்ற 9-வது இந்தியா – அமெரிக்கா சிவில் விண்வெளி கூட்டுப் பணிக்குழுவின் உயர்மட்டக் கூட்டத்தின்போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிலவுப் பரப்பில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களைத் தடையின்றித் தங்க  வைத்துப் பராமரிக்கக் கூடிய இந்த நவீனக் கட்டமைப்பில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அடைந்து வரும் அசுர வளர்ச்சியையும், சந்திரயான் போன்ற தொடர் வெற்றிகளையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த அழைப்பு, இந்திய விண்வெளித் துறைக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகக் கருதப்படுகின்றது. நாசாவின் இந்த அதிரடி ஆஃபரால் இந்திய விண்வெளித் துறையின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.