மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்த விம்போது, தீயணைப்பு வீரர்கள் குழாயை இயக்கத் திணறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே – நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு  மருத்துவமனைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சென்று கொண்டிருந்த கம்பெனி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமும் உடனடியாக விரைந்து சென்றது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆனால், தீயை அணைப்பதற்காக தண்ணீரை பீய்ச்சியடிக்கப் பயன்படுத்தப்பட்ட குழாய்  எதிர்பாராதவிதமாக எங்கோ சிக்கிக் கொண்டது. இதனால் தீயை அணைக்கும் பணியில் கடுமையான தாமதம் ஏற்பட்டது.

Instruction manual skipped, just pull harder.
byu/SensitiveSorbet1999 inpune

தண்ணீர் குழாயை விடுவிக்க வீரர்கள் போராடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சில வினாடிகளில் முடிக்க வேண்டிய பணியை, குழாய் சிக்கியதால் நீண்ட நேரம் தாமதமாகச் செய்ததைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், “இவர்களுக்கு யார் முறையான பயிற்சி அளித்தது?” என்று தீயணைப்பு வீரர்களின் பயிற்சி மற்றும் உபகரணங்களைக் கையாளும் திறன் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோ மூலம், அவசர காலங்களில் தீயணைப்பு உபகரணங்களை விரைவாகவும் திறமையாகவும் கையாளுவது எவ்வளவு முக்கியம் என்பதும், அவசர வாகனங்களுக்கு வழிவகுக்கத் தேவையான போக்குவரத்து மேலாண்மை எந்த அளவுக்குத் தேவையாக உள்ளது என்பதும் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.