உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சாகிபாபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டுமானப் பகுதிக்குள், 17 வயது சிறுவன் சமீர் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் நுழைந்துள்ளனர். அங்கு சமூக வலைதளங்களுக்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்கும் நோக்கில் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வளாகத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலாளி விவேக் யாதவ், உள்ளே நுழைந்தவர்களைத் திருடர்கள் என நினைத்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த காவலாளி, தன்வசம் இருந்த லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக சமீர் என்ற சிறுவனின் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில், அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவனைக் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சாகிபாபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணமான காவலாளி விவேக் யாதவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சமீர் உடன் சென்ற மற்றொரு நண்பர் மற்றும் பாதுகாப்புப் பணியில் நிகழ்ந்த விதிமீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
