பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் தொடர்ந்து 36 முறை வேலைவாய்ப்பு நிராகரிப்பை சந்தித்தும் தனது முயற்சியை கைவிடவில்லை. மேலும், உடல்நலப் பிரச்னை காரணமாக முந்தைய வேலையை விட்டு 5 மாதங்கள் இடைவெளியில் இருந்தார். கடுமையான முதுகுவலி உள்ளிட்ட சிரமங்களையும் எதிர்கொண்ட போதிலும், வேலை தேடுவதில் தொடர்ந்து முயற்சி செய்தார். இறுதியில் ஹைதராபாதைச் சேர்ந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.
கடுமையான சயாட்டிகா பிரச்னை காரணமாக முந்தைய நிறுவனத்தில் இருந்து விலகியதாக அந்த மென்பொருள் பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த 5 மாத இடைவெளியை வீணாக்காமல், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொண்டார். குறிப்பாக பைத்தான், ரியாக்ட், ஏடபிள்யூஎஸ் ஆகியவற்றில் தனது திறமையை மேம்படுத்தியதுடன், உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய திறன்களையும் கற்றார். இதன் மூலம் அடுத்தடுத்த நேர்காணல்களுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
வேலை தேடும் காலத்தில் பல நிறுவனங்களின் நேர்காணல்களில் பங்கேற்றும் வெற்றி கிடைக்கவில்லை. வெல்ஸ் பார்கோ நிறுவனத்தில் நான்காவது சுற்று வரை சென்றும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. டெலாய்ட் நிறுவனத்தில் விண்ணப்பம் பல மாதங்கள் நிலுவையில் இருந்தது. பிராக்டல் நிறுவனத்தில் அனைத்து சுற்றுகளையும் கடந்த நிலையில், இறுதிச் சுற்றில் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால் வேலை வாய்ப்பை இழந்தார். இவ்வாறு தொடர்ந்து 36 நிராகரிப்புகளை சந்தித்த பிறகும் அவர் மனம் தளரவில்லை.
இறுதியாக ஹைதராபாதைச் சேர்ந்த அல்கோலீப் நிறுவனத்தில் எஸ்டிஇ-3 பணிக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக தனது குடும்பத்தை பெங்களூருவில் விட்டுவிட்டு தனியாக ஹைதராபாத் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அதை தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். “சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கவில்லை என்றாலும், பல மாதங்களுக்குப் பிறகு குடும்பத்துக்கு மீண்டும் பொருளாதார ஆதரவாக இருக்க முடிவது மிகப்பெரிய நிம்மதி” என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து முயற்சி செய்து, ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்றுக்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
