கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி அருகே உள்ள மலைப்பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில், தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததைக் கண்டித்து வாலிபர் தனது நண்பருடன் சேர்ந்து நிகழ்த்திய கொடூரக் கொலைச் சம்பவம் தற்போது காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கூலித் தொழிலாளி பிரகாஷ் (26) என்பவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று மலைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், சீனிவாஸ் மற்றும் அவரது நண்பர் நதீம் ஆகிய இரு வாலிபர்களை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின; கைதான சீனிவாஸின் தாயான பசம்மா (45) என்பவருடன் கொலை செய்யப்பட்ட பிரகாசுக்குக் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக வந்த விஷயம் அந்த பெண்ணின் மகனான சீனிவாசுக்குத் தெரியவந்ததை அடுத்து, தன் தாயுடன் பழகிய பிரகாஷை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சீனிவாஸ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று பிரகாசை நைசாக மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சீனிவாஸ் மற்றும் நதீம் ஆகியோர் அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிரகாஷ் நன்றாகக் குடிபோதையில் தள்ளாடியபோது, அவரை அரை நிர்வாணப்படுத்தி தலையில் பெரிய கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொன்றுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
