ரூ.2 கோடி காசோலை மோசடி வழக்கு தொடர்பாகப் பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் நடிகர் சரத்குமார் பெற்ற ரூ.2 கோடி கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை, அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்ப வந்ததாகக் கூறப்படுகிறது. செக் பவுன்ஸ் ஆனதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டு நடிகர் சரத்குமாருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. வங்கி கணக்கில் பணம் இல்லாத சூழலில் காசோலை வழங்கப்பட்டது குறித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி சரத்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
