ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கொளத்தூரில் மாபெரும் இணைப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா தலைமை தாங்க, எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு முன்னிலை வகித்தார். மேலும் மாவட்டச் செயலாளர் தணிகா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

​முதலமைச்சர் விஜய்யின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்ட ஏராளமான இஸ்லாமிய மக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைத்துக் கொண்டனர். முதன்மை எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக, மஜக, தமுமுக, நாதக போன்ற பல்வேறு இயக்கங்களில் இருந்தும் விலகிய 700-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே நாளில் ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​எதிர்க்கட்சியின் முக்கியக் கோட்டையாகக் கருதப்படும் கொளத்தூர் பகுதியிலேயே இத்தனை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மாற்று இயக்கங்களில் இருந்து விலகி ஆளுங்கட்சியில் இணைந்துள்ளனர். முதலமைச்சர் விஜய் அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கான பாதுகாப்புக்கும் கிடைத்த வெற்றியாகவே இந்த மெகா இணைப்பை தவெக நிர்வாகிகள் பெருமிதத்துடன் பார்க்கின்றனர்.

​தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இணைப்பு விழாக்கள் வரவிருக்கும் அரசியல் களத்தில் ஆளுங்கட்சியின் பலத்தை மேலும் பலமடங்கு உயர்த்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தொண்டர்கள் தொடர்ச்சியாக தவெகவை நோக்கி நகர்வது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.