நடிகை திரிஷா தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தொடர்பான அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்களுக்கு மத்தியில் திரிஷாவின் பெயரும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ராங்கி’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் திரிஷா அளித்த பேட்டி ஒன்றின் விடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் குறித்து திரிஷா வெளிப்படையாக பேசியிருந்தார். தன்னைப் பற்றி தினமும் ஏதாவது எழுதப்படுவதாகவும், சிலர் தன்னைப் பற்றிய விஷயங்களை கற்பனையாக உருவாக்கி வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுபோன்ற தகவல்களுக்கு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தால் அதற்கு முடிவே இருக்காது என்பதால், அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் திரிஷா கூறியிருந்தார்.
மேலும், தனக்கு உணவு மிகவும் பிடிக்கும் என்றும் திரிஷா அந்தப் பேட்டியில் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். வீட்டில் தனது அம்மா சமைக்கும் சைவ உணவு மிகவும் பிடிக்கும் என்றும், வெளியே சாப்பிடும்போது சென்னையில் உள்ள பல்வேறு உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “சங்கீதா சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவர் கூறியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் தனியாக பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அந்தக் கருத்து தொடர்பாக பல்வேறு விதமான விவாதங்களும் எழுந்துள்ளன.
அதேபோல், உணவுக்காக நாடு விட்டு நாடு செல்வதாக தன்னைப் பற்றி பரவிய மீம்ஸையும் திரிஷா அப்போதே மறுத்திருந்தார். அருகில் செல்லும்போது அந்த இடத்தில் கிடைக்கும் நல்ல உணவை சாப்பிடுவேன்; அதற்காக தனியாக நாடு விட்டு நாடு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். தற்போது நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தப் பழைய பேட்டி மீண்டும் வைரலாகி வரும் நிலையில், திரிஷா அப்போது கூறிய கருத்துகளையே சமூக வலைதளப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். பழைய பேட்டியில் கூறப்பட்ட கருத்துகளை தற்போதைய நிகழ்வுகளுடன் இணைத்து பல்வேறு யூகங்கள் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
