கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதான அகஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்த நிலையில், அதில் பங்கேற்க இருந்த 2-ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு செல்ல விடாமல் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சில பொதுமக்கள் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் அகஸ்டினை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அகஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பள்ளி சூழலில் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
