தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று குறுவை சாகுபடி நிவாரணம் மற்றும் கர்நாடக அரசுடனான நீர்ப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் குறுவை சாகுபடி விவகாரம் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “குறுவை சாகுபடி நிவாரணம் ஏற்கனவே அரசு சார்பில் வழங்கப்பட்டுவிட்டது. ‘அரசியலே நாங்கள்தான்’ என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று எனக்குத் தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர்  படித்திருந்தாலே நாட்டில் என்ன நடக்கிறது என்பதுத் தெரிந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசுகளுமே அறிவிப்பதுதான். ஆனால், தற்போது விவசாயிகள் கோருவது வறட்சி நிவாரணம். முதலாவதாக, குறுவை சிறப்புத் தொகுப்பிற்கும் வறட்சி நிவாரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நேரடியாக விவசாயிகளிடம் சென்று பேசினாலே உண்மை நிலைமை என்ன என்பது புரியவரும்” என்று சாடினார்.

இதனைத் தொடர்ந்து, காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் கர்நாடக அரசுடனான பேச்சுவார்த்தை குறித்து அவை விவாதத்தில் எழுந்த கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கையில், “கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளைத் தனிப்பட்ட முறையில் நான்தான் எடுத்தேன். அந்த முயற்சியில் எனக்கு ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்” என்று பேசினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகாவிற்கு நேரில் சென்று மண்டியிட வேண்டிய அவசியம் எந்தச் சூழலிலும் இல்லை. அந்த அவமானத்தைத் தான் தாங்கிக்கொள்வதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், அது முதலமைச்சருக்கு மட்டும் ஏற்படும் அவமானம் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே ஏற்படும் மிகப்பெரிய அவமானமாகும்” என்று காட்டமாகக் கூறினார்.
இவ்வாறாக, குறுவை நிவாரண நிதி மற்றும் கர்நாடக மாநிலத்துடனான பேச்சுவார்த்தை ஆகிய இரு முக்கிய விவகாரங்களிலும் முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பேரவையில் விவாதம் சூடேறியது.