கோலாலம்பூரிலிருந்து கேரளாவின் கொச்சிக்குச் சென்ற பேட்டிக் ஏர் விமானத்தில், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவர் திடீரென அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தால் விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் கடும் பீதி அடைந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, காற்று வேகமாக வீசும் பயங்கரமான சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். அவசரகால கதவின் அருகில் அமர்ந்திருந்த நபர், ஜன்னல் பலகையை உடைத்து கதவைத் திறக்க முயன்றது தெரியவந்தது. இருப்பினும், விமானத்தின் நவீன வடிவமைப்பு மற்றும் கேபின் அழுத்தம் காரணமாக நல்வாய்ப்பாகக் கதவு திறக்கப்படவில்லை.

உடனடியாகச் செயல்பட்ட சக பயணிகளும் விமானப் பணியாளர்களும் சேர்ந்து, அந்த நபரைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப்போட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விமானம் கொச்சியில் பத்திரமாகத் தரையிறங்கும் வரை அந்த நபர் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இன்ஸ்டாகிராமில் இந்தத் துயரமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஒரு பயணி, “இது மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்தது, நல்லவேளையாகப் பணியாளர்களின் உடனடி நடவடிக்கையால் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரையேறினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Matty | Bucket List Family Travel (@ourwanderinglives)

“>

இணையத்தில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சமயோசிதமாகச் செயல்பட்ட பணியாளர்களையும் பயணிகளையும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த நபருக்கு விமானங்களில் பயணம் செய்ய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.