சமூக வலைதளங்களில் தற்போது அனைவரையும் பதைபதைக்க வைக்கும் ஒரு விசித்திரமான மற்றும் நம்ப முடியாத நிகழ்வு வேகமாகப் பரவி வருகிறது. பிரபல டிக்டாக் கிரியேட்டரான @toothlessandruthless என்ற கணக்கை நடத்தி வரும் நபர், தனது குடும்பத்தின் நீண்ட கால வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் காரணமாக ஒரு மரபணு பரிசோதனை செய்துள்ளார்.

அந்தப் பரிசோதனை முடிவுகள் வந்தபோது, அவருக்குக் கீழே பூமியே நழுவியது போன்ற ஒரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தான் எத்தனையோ காலம் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, தற்போது இரண்டு அழகான குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருக்கும் தனது மனைவியும், தானும் சொந்த முறையில் முதல் தலைமுறை ரத்தச் சொந்தங்கள் அதாவது அத்தை மகள் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்ததிலிருந்து அந்த நபர் கடும் மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளார். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாங்கள் திருமணம் செய்துகொள்ளும்போது எங்களுக்கோ அல்லது எங்கள் குடும்பத்தாருக்கோ இந்த உறவுமுறை பற்றிக் துளி அளவுகூடத் தெரியாது. இப்போது இந்த உண்மை தெரிந்த பிறகு நான் என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை; நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டுமா?

எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டுள்ள அவரது வீடியோ இணையத்தில் கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிட்டதாலும், அவர்களின் தாத்தா – பாட்டி வழியில் உள்ள ரகசியம் யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டதாலும் இந்தத் தவறு யாருக்கும் தெரியாமல் நடந்துள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதும், நெட்டிசன்கள் இரண்டு வெவ்வேறு துருவங்களாகப் பிரிந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரத்த உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்களால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதால், உடனடியாக அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், முறையான கவுன்சிலிங் பெற வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் எச்சரித்து வருகின்றனர்.

அதேசமயம், ஏற்கெனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்ட நிலையில், கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதால் இதை நினைத்து வருத்தப்படாமல் தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து மகிழ்ச்சியாக நடத்தும்படி மற்றொரு தரப்பினர் ஆறுதல் கூறி வருகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இந்தத் தம்பதியினரின் கதை உலகளவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.