பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகனும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்தவருமான 13 வயது சிறுவன் தியோ ஆழிசை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரும் அவரது மனைவியும் பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதால், அச்சிறுவன் தனது தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், வீட்டின் பின்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பிய குடும்பத்தினர் சிறுவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்த மரக்காணம் காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகப் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிக இளம் வயதில் பள்ளி மாணவன் இத்தகைய விபரீத முடிவை எடுப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
