அன்பும், அக்கறையும், ஆரோக்கியமும் மட்டுமே நிரம்பியிருக்கும் ஒரே இடம் நம் வீட்டுச் சமையலறைதான். “வீட்டுச் சாப்பாடு உடம்புக்கு நல்லது, அதில் எந்தக் கலப்படமும் இருக்காது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தாயும், மனைவியும் தன் குடும்பத்திற்குப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் பரிமாறுகிறார்கள். ஆனால், அதே சமையலறையில், நாம் தினமும் அரும்பாடுபட்டுச் சமைக்கும் உணவை மெல்ல மெல்ல விஷமாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்து மறைந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது வேறு எங்குமில்லை… நம் வீட்டின் பிரஷர் குக்கர் மூடியில் இருக்கும் அந்தச் சிறிய ரப்பர் வளையத்தில் கேஸ்கட் தான் ஒளிந்திருக்கிறது.
தினமும் காலையில் அவசர அவசரமாகக் குக்கரில் சோறும், பருப்பும் வைத்துவிட்டு, சமைத்து முடித்ததும் குக்கரைத் தேய்த்துக் கழுவி கவிழ்த்து வைக்கும் பலரும், அதன் மூடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த கருப்பு ரப்பர் வளையத்தைக் கழற்றிச் சுத்தம் செய்ய மறந்துவிடுகிறார்கள். “அதுதானே சும்மா ரப்பர் தானே, அதில் என்ன இருக்கப் போகிறது?” என்ற நமது அலட்சியமே, அங்கு பாக்டீரியாக்களும் பூஞ்சைக் காளான்களும் பெருகுவதற்குப் பாதையை அமைத்துக் கொடுக்கிறது. சமைக்கும்போது சிந்தும் எண்ணெய் பிசுக்கு, உணவுத் துகள்கள், மற்றும் தங்கிவிடும் ஈரப்பதம் ஆகியவை அந்த ரப்பர் கேஸ்கட்டின் இடுக்குகளில் போய் அமைதியாகக் குடியேறிவிடுகின்றன.
நாம் நினைக்கலாம், “குக்கரில் அதிக வெப்பத்திலும் நீராவியிலும்தானே சமைக்கிறோம், இதில் கிருமிகள் எப்படி உயிர்வாழும்?” என்று. உண்மைதான், வெப்பத்தில் பெரும்பாலான கிருமிகள் அழிந்துவிடும். ஆனால், அந்த கேஸ்கட்டில் பல நாட்களாகப் படிந்து, அழுகிப்போன உணவின் கழிவுகளும், அதனால் உண்டாகும் நச்சுத்தன்மையும் நீராவியின் வழியே நாம் ஆசையாகச் சமைக்கும் பருப்பிலும், காய்கறிகளிலும், சாதத்திலும் சொட்டுச் சொட்டாகக் கலக்கத் தொடங்குகிறது. இதன் விளைவாகத்தான், வீடே சுத்தமாக இருக்கிறது, சமைத்த உணவும் புதியதுதான்… ஆனாலும் திடீரெனக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. காரணம் புரியாமல் நாம் மருந்து மாத்திரைகளைத் தேடி ஓடுகிறோம்; ஆனால், ஆபத்து நம் வீட்டு குக்கருக்குள்ளேயேதான் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நமது குடும்பத்தின் ஆரோக்கியம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. இதைத் தவிர்க்கப் பெரிய காரியம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு முறை சமைத்து முடித்த பிறகும், அந்த ரப்பர் கேஸ்கட்டைத் தனியாகக் கழற்றி, சோப் போட்டுத் தேய்த்துக் கழுவி, நன்றாகக் காயவைத்து மீண்டும் பொருத்த வேண்டும். குக்கரைப் பயன்படுத்தாத நேரத்தில் மூடியை இறுக்கமாகப் பூட்டி வைக்காமல், லேசாகத் திறந்து வைத்தால் ஈரப்பதம் தங்காது. கேஸ்கட்டில் லேசான வெடிப்போ அல்லது எவ்வளவு கழுவியும் போகாத துர்நாற்றமோ இருந்தால், தயங்காமல் அதை மாற்றிவிட்டுப் புதியதை வாங்க வேண்டும். நம் அன்புக்குரியவர்களின் வயிற்றில் நாம் பரிமாறுவது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டுமே தவிர, நமது சிறு அலட்சியத்தால் உருவான நச்சாக இருக்கக்கூடாது!
