தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், ரேபிடோ நிறுவனத்தின் பைக் டாக்சியில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அருவருப்பான சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரேபிடோ சேவையைப் பயன்படுத்திப் பயணித்தபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் வண்டியை இயக்கும்போதே அபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டு அருவருப்பான செயல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

நகரங்களில் பெண்களின் அன்றாடப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் இத்தகைய செயலிகள் வழி இயங்கும் வாகனங்களில், அவர்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உறுதியற்றதாக உள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் துயரச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், தான் பயணித்துக் கொண்டிருந்தபோதே ஓட்டுநர் தனது கைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டும், சிக்னல்களிலும் பயணத்தின்போதும் அருவருக்கத்தக்க அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டும் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பெரும் பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளான அந்தப் பெண், உடனடியாகச் பாதுகாப்பாக இறங்கி இக்கொடூரத்தைச் சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இந்தச் செய்தி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரேபிடோ நிறுவனத்தின் மீதும், ஓட்டுநர்களின் பின்னணியைச் சரிபார்க்காத அலட்சியப் போக்கின் மீதும் பொதுமக்கள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் உடனடியாகப் பதிலளித்துள்ளது. இத்தகைய சகித்துக் கொள்ள முடியாத ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட அந்த ஓட்டுநரின் கணக்கை உடனடியாக முடக்கியுள்ளதாகவும், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான பின்னணிச் சோதனைகளும் பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தீவிரமாக எழுந்துள்ளது.