மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜாபூர் காவல் நிலையத்திற்குள்ளேயே 22 வயது இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினர் மீதான தாக்குதல் வழக்கில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பு செல்போனில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி நாயக் என்ற 22 வயது இளம்பெண், தனது தாயார் மற்றும் சகோதரருடன் சேர்ந்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் அவர்களது புகாரைப் பரிசீலித்துக்கொண்டிருந்தபோது, திடீரென பிங்கி தான் மறைத்து எடுத்துவந்திருந்த விஷத்தை திடீரென குடித்தார். உடனடியாக அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு மகாராஜாபூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் வழக்கு ஒன்றில் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அலைந்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று பிங்கியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது பற்றி குடும்பத்தினரின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஜூலை 6 அன்று பிங்கியின் சகோதரர் பிரசாந்த் நாயக் கிராமத்தைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை.
மேலும், காவல் நிலைய பொறுப்பாளர் குற்றவாளிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இதனால் குற்றவாளிகள் தொடர்ந்து தங்களை மிரட்டி வருவதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறையின் இந்த அலட்சியப்போக்கினால் மனமுடைந்தே பிங்கி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரஜத் சக்லேச்சா கூறுகையில், “கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிரட்டல் தொடர்பான மற்றொரு புகாரிலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது” என்றார்.
MP: 22-Year-Old Woman Consumes Poison Inside Police Station Over ‘Delay In Justice’ In Chhatarpur #MPnews #MadhyaPradesh pic.twitter.com/8XJeWIwR8Y
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 2, 2026
மேலும் அவர் கூறுகையில், “சம்பவத்தன்று பிங்கி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து, முந்தைய வழக்கின் முக்கியக் குற்றவாளியும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான சந்தோஷ் ரைக்வார் என்பவன் துப்பாக்கியுடன் தங்கள் வீட்டிற்கு வெளியே வந்து மிரட்டியதாகப் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போதே, பிங்கி திடீரென விஷம் குடித்துவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மூன்று எப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் பதிவு செய்த வீடியோ மற்றும் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் யார் பொறுப்பு என நிரூபிக்கப்படுகிறதோ அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் பிங்கிக்குத் முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் 24 மணி நேரத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அந்தக் காலக்கெடுவிற்குப் பின்னரே அவரது உடல்நிலை குறித்து மேலும் மதிப்பிட முடியும்” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
