மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்பத்தினரின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்ற ஒரு திருமணம், வெறும் 7 நாட்களில் (168 மணி நேரம்) முடிவுக்கு வந்துள்ள விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குக் குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவருக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் காதல் இருந்ததாகவும், குடும்பத்தின் அழுத்தத்திற்குப் பயந்தே அந்தத் திருமணத்திற்கு அவர் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த கையோடு, தனது கணவரிடம் உண்மையை வெளிப்படுத்திய அந்தப் பெண், தன்னால் அவருடன் வாழ முடியாது என்றும் தான் வேறொருவரை விரும்புவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மனைவியின் நிலையைப் புரிந்து கொண்ட அந்த முதிர்ச்சியான கணவரும், ஒருவருக்கொருவர் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வதை விடப் பிரிவதே நல்லது என்று முடிவு செய்தார்.

பொதுவாக, இந்து திருமணச் சட்டத்தின்  படி, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற வேண்டுமென்றால், தம்பதியினர் குறைந்தது 1 வருடம் பிரிந்து வாழ வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வர்ஷா குப்தா, இந்து திருமணச் சட்டத்தின் படி உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் மேற்கோள் காட்டி வாதிட்டார். “எந்தத் திருமணம் நடைமுறையில் உண்மையாக அமையவில்லையோ, அந்தத் தம்பதியினரை கட்டாயப்படுத்தி ஒன்றாக வாழச் சொல்வது அவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்குச் சமம்” என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட இந்தூர் குடும்ப நீதிமன்றம், வழக்கமான 1 வருட காத்திருப்பு காலத்திலிருந்து விலக்கு அளித்து, திருமணமான நான்கே நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து, வெறும் 7 நாட்களுக்குள்ளாகவே (168 மணி நேரம்) பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழங்கி அதிரடித் தீர்ப்பளித்தது.